நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்; கெஜ்ரிவாலுக்கு வீட்டில் உணவு அளித்த ஆட்டோக்காரர் பேட்டி
குஜராத்தில் பிரதமர் மோடியின் பொது பேரணியில் தலையில் காவி குல்லா, துண்டு அணிந்தபடி ஆட்டோ ஓட்டுனர் கலந்து கொண்டார்.
ஆமதாபாத்,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த செப்டம்பர் 2-வது வாரம் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில், ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிய கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசி முடித்ததும், விக்ரம் தந்தானி என்ற கத்லோடியா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தனது வீட்டுக்கு சாப்பிட வரும்படி கெஜ்ரிவாலிடம் கோரினார்.
அதற்கு உடனடியாக கெஜ்ரிவால் ஒப்பு கொணடார். இதனை தொடர்ந்து, அன்றிரவு 8 மணியளவில் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கெஜ்ரிவால் கிளம்பி, விக்ரமின் ஆட்டோவில் பயணித்து, அவரது வீட்டுக்கு புறப்பட்டார்.
எனினும், கெஜ்ரிவாலை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர், ஆட்டோ ஓட்டுனருக்கு பின்னால் காவல் அதிகாரி ஒருவர் அமர்ந்து கொண்டார்.
அவர்களது ஆட்டோவை காவல் துறையின் 2 கார்கள் பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து சென்றன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் ஆமதாபாத் நகரில் உள்ள தல்தேஜ் பகுதியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த பொது பேரணியில் ஆட்டோ ஓட்டுனர் விக்ரம் பங்கேற்றார். அவர், தலையில் காவி குல்லா மற்றும் காவி நிற துண்டு அணிந்தபடி காணப்பட்டார். இதுபற்றி கூறிய அவர், நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என்றும் பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் கூறினார்.
பின்னர் ஏன் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அழைத்து உணவு வழங்கினீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த விக்ரம், ஆட்டோ ஓட்டுனர்களின் யூனியன் தலைவர்கள் அப்படி செய்யும்படி என்னிடம் கேட்டு கொண்டனர். அதனால், அவரை நான் வீட்டுக்கு அழைத்து சென்றேன் என அவர் கூறியுள்ளார்.