கேரளாவை உலுக்கிய நரபலி வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு உளவியல் பரிசோதனை - போலீஸ் கமிஷனர் தகவல்
பிறரை காயப்படுத்தி அல்லது கொலை செய்து மகிழ்ச்சி அடையும் அளவிற்கு ஷபி மனப்பிறழ்வு கொண்ட நபர் என கமிஷனர் எச்.நாகராஜு தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் 2 பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த விவகாரத்தில் போலி மந்திரவாதி முகம்மது ஷபி, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரையும், வரும் 26-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த ரோஸ்லின் என்ற பெண்ணையும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் இவர்கள் நரபலி கொடுத்துள்ளனர். இதையடுத்து நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என முகமது ஷபி கூறியதை நம்பி, இருவரின் சடலங்களையும் 60-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சமைத்து 3 பேரும் சாப்பிட்டுள்ளனர்.
மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் போலி மந்திரவாதி ஆகிய மூவரையும் கைது செய்தனர். நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷபி மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல், பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நிலுவையில் உள்ளன. மேலும், 75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது.
இது குறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனர் எச்.நாகராஜு கூறியதாவது:-
"கொரோனா காலத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஷபிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ஷபி ஒரு 75 வயது மூதாட்டியை மிக கொடூரமான முறையில் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கிலும் அதே போன்ற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஷபி பாலியல் ரீதியாக வக்கிர மனம் கொண்டவராக இருக்கிறார். பிறரை காயப்படுத்தி அல்லது கொலை செய்து மகிழ்ச்சி அடையும் அளவிற்கு மனப்பிறழ்வு கொண்ட நபர். அவருக்கு உரிய உளவியல் பரிசோதனை நடத்துவோம். திருச்சூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அவரது உளவியல் மதிப்பீட்டை மேற்கொள்வார்."
இவ்வாறு போலீஸ் கமிஷனர் எச்.நாகராஜு தெரிவித்துள்ளார்.