இந்திய ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது? இந்த முறை யாருக்கு அதிக வாய்ப்பு?-முழு விவரம்

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தெர்தல்

Update: 2022-06-11 10:14 GMT

னாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது.

அதன்படி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 29-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ந் தேதி நடைபெறும்.

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும். போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூலை 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.


ஜனாதிபதி தேர்தலில் 776 எம்.பி.க்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும்.

பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன.

பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது. மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தடவை ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளமும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்தன. இந்த ஆண்டும் இந்த இரு கட்சிகளும் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதை கருத்தில்கொண்டு பா.ஜனதா மூத்த தலைவர்கள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதால் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இடையே அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் விறுவிறுப்பை ஏற்றி உள்ளன.

தற்போதைய நிலவரப்படி பிரதமர் மோடி புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரும் எதிர்பாராத வகையில் வேட்பாளரை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

6 பேரில் ஒருவர்

பழங்குடி இனத்தை சேர்ந்தவர் அல்லது இஸ்லாமியர் ஒருவருக்கு புதிய ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை பிரதமர் மோடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. வட்டாரத்தில் 6 பேரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு, கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல், சத்தீஷ்கர் கவர்னர் அனுசுயா, கர்நாடக கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகிய 6 பேர் பெயர்தான் தீவிரமாக பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 6 பேரில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு பெயர் முன்னிலையில் உள்ளது. வேட்பாளர் தேர்வு போட்டியில் அவர்தான் முன்களத்தில் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திரவுபதி முர்மு ஒடிசா மாநில பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள சந்தல் பழங்குடி இனம் மிக மிக பழமையான இனமாகும். எனவே அந்த பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் திரவுபதி முர்முவை ஜனாதிபதி ஆக்க பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது.

திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் பிஜூ ஜனதாதளம் ஆதரவை உறுதியாக பெறுவது மட்டுமின்றி 6 மாநில பழங்குடி இன மக்களின் ஆதரவை பெற முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். இதை கருத்தில் கொண்டுதான் திரவுபதி முர்முவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது



                                                                                  யார் இந்த திரவுபதி முர்மு?

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு.

இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்க்கண்டில் அதிக அளவில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அசாம், திரிபுரா, பீகார், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த சமூகத்தினர் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

அரசியல் ஆர்வம் காரணமாக திரவுபதி முர்மு பாஜகவில் இணைந்தார். ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார். ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் திரவுபதி முர்மு பெற்றார். அத்துடன், ஒடிசா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாநிலத்தின் கவர்னராக்கப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் விருப்பத் தேர்வாகவும் திரெளபதி முர்மு இருப்பார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரீப் முகமது கான்

இதற்கிடையே சமீபத்தில் இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி இந்தியாவில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் கேரள கவர்னர் ஆரீப் முகமது கானுக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். ஒருவேளை திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் ஆரீப் முகமது கானை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் திரவுபதி முர்மு, ஆரீப் முகமது கான் இருவரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சத்தீஷ்கர் கவர்னர் அனுசுயா மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் விரைவில் வரவுள்ள மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதுபோல உத்தரபிரதேச மாநில கவர்னர் அனந்திபென்னுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்கிறார்கள்.

தமிழிசை சவுந்தரராஜன்

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் பெயரும் தற்போது புதியதாக ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பேசப்படுகிறது. ஆனால் ராஜ்நாத்சிங் அதை விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு பதில் கர்நாடக மாநில கவர்னராக இருக்கும் தவர்சந்த் கெலாட்டுக்கு பதவி கொடுக்கலாம் என்று பரிசீலிக்கப்படுகிறது. இவர் பா.ஜ.க.வில் உள்ள தலித் இன தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். எனவே தவர்சந்த் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளது.

இதற்கிடையே தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி பதவி கிடைக்காத பட்சத்தில் அவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு பிறகு சில மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட உள்ளனர். அப்போது டாக்டர் தமிழிசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப்போவது யார் என்பதில் பா.ஜ.க. வட்டாரத்திலும் மிகுந்த பரபரப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை வேட்பாளராக களம் இறக்க சோனியா முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று மாநில ஜனாதிபதி தேர்தல் அட்டவணை வெளியானதும் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார்.

நேற்று இரவு அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்த ஆலோசித்து வருகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியை சேராத எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மாநில கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருக்கு வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால் நாடு முழுவதும் அனைத்து முக்கிய கட்சிகளிடமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது?


ஜனாதிபதியை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள்,எம்.பிக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் ஜனாதொபதி தேர்தலில் வாக்குரிமை கிடையாது.

1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்.எல்.ஏ. எம்.பி.யின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.

உதாரணமாக, உத்தர பிரதேசம், மராட்டியம் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள்தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றை விட அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தர பிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ. பதவி. அங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு 234 x 176 = 41,184

மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த எம்.எல்.ஏ ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

16ஆம் ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,231. எம்.பிக்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,200. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் உள்ள மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431.

இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலை தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் நியமிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் நடத்துவார். மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சட்டப்பேரவை செயலாளர் ஆர். முனிசாமி, சட்டப்பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் என். அலமேலு ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள்


1 ராஜேந்திரபிரசாத் 26 ஜனவரி1950 - 13 மே 1962

2 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 13 மே 1962 – 13 மே 1967

3 ஜாகீர் உசேன் 13 மே 1967 – 3 மே 1969

பொறுப்பு வி.வி.கிரி 3 மே 1969 – 20 ஜூலை 1969

பொறுப்பு முகமது ஹிதாயத்துல்லா 20 ஜூலை 1969 to 24 ஆகஸ்ட்டு 1969

4 வி.வி.கிரி 24 ஆகஸ்ட்டு1969 – 24 ஆகஸ்ட்டு 1974

5 ஃபக்ருதீன் அலி அகமது 24 ஆகஸ்ட்டு 1974 – 11 பிப்ரவரி 1977

பொறுப்பு பசப்பா தனப்ப ஜட்டி 11 Fபிப்ரவரி 1977 - 25 ஜூலை 1977

6 நீலம் சஞ்சீவ ரெட்டி 25 ஜூலை 1977 – 25 ஜூலை 1982

7 கியானி சயில் சிங் 25 ஜூலை 1982 – 25 ஜூலை 1987

8 ஆர் வெங்கட்ராமன் 25 ஜூலை 1987 – 25 ஜூலை 1992

9 சங்கர் தயாள் சர்மா 25 ஜூலை 1992 – 25 ஜூலை 1997

10 கே ஆர் நாராயணன் 25 ஜூலை 1997 – 25 ஜூலை 2002

11 ஏபிஜெ அப்துல் கலாம் 25 ஜூலை 2002 – 25 ஜூலை 2007

12 பிரதிபா பாட்டீல் 25 ஜூலை 2007 – 25 ஜூலை 2012

13 பிரணாப் முகர்ஜி 25 ஜூலை – 25 ஜூலை 2017

14 ராம் நாத் கோவிந்த் 25 ஜூலை 2017 தொடருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்