பேரிடர் நிவாரண உதவி - தமிழ்நாடு அரசுக்கு இமாச்சல பிரதேச முதல் மந்திரி நன்றி

இமாச்சலுக்கு பேரிடர் நிவாரண உதவி வழங்கிய தமிழக அரசுக்கு அம்மாநில முதல் மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 08:25 GMT

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங்கிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச பேரிடர் பாதிப்புகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கி உதவிய தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

உங்களின் ஆதரவு துன்பத்தின் போது ஒற்றுமை, இரக்கத்தின் உணர்வை காட்டுகிறது என்றும், பருவமழை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்