இந்திய தேயிலையில் அதிக அளவில் பூச்சி கொல்லிகள்; பல நாடுகள் நிராகரிப்பு
இந்திய தேயிலையில் அதிக அளவில் பூச்சி கொல்லி, ரசாயன பொருட்கள் உள்ளன என கூறி பல நாடுகள் நிராகரித்து உள்ளன.
கொல்கத்தா,
இந்திய தேயிலைக்கு ஈரான் மற்றும் காமன்வெல்த் சுதந்திர நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் ரூ.5,246.89 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்திய தேயிலை ஏற்றுமதிகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் அன்ஷுமன் கனோரியா இன்று கூறும்போது, சர்வதேச சந்தையில் இலங்கை நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நிரப்பப்படும் வகையில், ஏற்றுமதிகளை அதிகரிக்க தேயிலை வாரியம் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சி கொல்லிகள் மற்றும் ரசாயன பொருட்கள் கூடுதலாக காணப்படும் சூழலில் சர்வதேச மற்றும் உள்ளூரில் கொள்முதல் செய்பவர்கள் கூட தேயிலை பொருட்களை தொடர்ச்சியாக நிராகரித்து விட்டனர் என கூறியுள்ளார்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து தேயிலைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கழக (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி 19.59 கோடி கிலோவாக இருந்தது. நடப்பு ஆண்டில் இதனை 30 கோடியாக உயர்த்த வாரியம் இலக்கு வகுத்துள்ளது.
தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதற்கு பதிலாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.யின் விதிகளை தளர்த்த வேண்டும் என்றே பலரும் வலியுறுத்துகின்றனர். இது தவறான அடையாளம் ஆகும் என கூறியுள்ளார்.