சிவமொக்காவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது எப்படி?; போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் பதில்

சிவமொக்காவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-09-21 19:45 GMT

சிவமொக்கா;

2 பயங்கரவாதிகள் கைது

சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இதுபற்றி மாநில உளவுத்துறை சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து சிவமொக்கா போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த நிலையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த மாஷ் முனீர் அகமது (வயது 22), சிவமொக்கா டவுனை சேர்ந்த சையது யாசின் (21) என்பது தெரியவந்தது. ேமலும் தலைமறைவாக உள்ள தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டது எப்படி?

இந்த நிலையில் சிவமொக்காவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவமொக்கா நகரில் கடந்த மாதம் நடந்த கலவரத்தின்போது துணிக்கடை ஊழியர் பிரேம் சிங் என்பவர் தாக்கப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வந்தோம். அவர்களில் சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் செல்போன் மூலம் சிறப்பு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி சிவமொக்காவில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இந்த விசாரணையில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 8 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 52 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.

மற்றொரு பயங்கரவாதி ஷாரிக் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். கைதான 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தீர்த்தஹள்ளியில் உள்ள தலைமறைவாக இருக்கும் ஷாரிக் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்