கேரளாவில் கனமழை: 2 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 3 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கனமழையால் 2 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் சிக்கி, 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பீச்சுகளுக்கோ அல்லது மலைப்பிரதேசங்களுக்கோ மக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்து சென்று உள்ளனர். ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மரங்கள் சாய்ந்து, வீடுகள் சேதமடைந்து உள்ளன.
இதனை தொடர்ந்து அரசு அமைத்து உள்ள 112 நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என முதல்-மந்திரி பினராயி விஜயன் பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.