பெங்களூருவில் தொடரும் சாரல் மழை

பெங்களூருவில் தொடரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-12 21:15 GMT

பெங்களூரு:-

குளிர்சாதன எந்திரங்களுக்கு ஓய்வு

மாண்டஸ் புயல் எதிரொலியாக கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, சிக்கமகளூரு, துமகூரு, கோலார் உள்பட தென்கர்நாடக பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 4-வது நாளான நேற்றும் மழை பெய்தது.

மழை பெய்து வருவதால் துணிகளை துவைத்து உலர வைக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையுடன் சேர்ந்து குளிரும் வாட்டி வதைத்து வருவதால் பெரும்பாலான வீடுகளில் மின்விசிறிகள், குளிர்சாதன எந்திரங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. வெளியே செல்லும் மக்கள் ஸ்வெட்டர், மப்புலர் அணிந்து கொண்டு தான் வருகிறார்கள்.

பெற்றோர் பரிதவிப்பு

மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு குழந்தைகளை சரியான நேரத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் மழை காரணமாக பள்ளிக்கு தாமதமாக தான் செல்கின்றனர். ஒரு சில இடங்களில் குழந்தைகள் பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு வீட்டில் இருந்தபடியே படித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்பவர்கள் மழையில் நனைந்தபடி தான் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

தொடர் மழை, கடும் குளிரால் பெங்களூரு நகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர், சளி, காய்ச்சல் தொல்லையால் மக்கள் அவதிப்பட்டும் வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மழை காரணமாக நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

4-வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்த நிலையில், மதியம் சிறிது நேரம் சூரியன் தென்பட்டது. ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு நகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது.

அடுத்த 3 நாட்களுக்கு மழை

மழையால் அவதிப்படும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலால் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையே பெங்களூருவில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள வானிலை மையம் பெங்களூருவுக்கு 15-ந் தேதி வரை மஞ்சள் அலர்ட் விடுத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்