கேராளாவில், 2 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை மஞ்சள் அலர்ட்
கேராளாவில் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய 2 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக வட கேரளாவில் கடலுண்டி (மலப்புரம்), பாரதபுழா (பாலக்காடு), ஷிரியா (காசர்கோடு), கரவனூர் (திருச்சூர்) மற்றும் காயத்ரி (திருச்சூர்) ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனுடன், தெற்கு கேரளாவில் உள்ள வாமனபுரம் (திருவனந்தபுரம்), நெய்யாறு (திருவனந்தபுரம்), கரமனா (திருவனந்தபுரம்), கல்லடா (கொல்லம்), மணிமலை (இடுக்கி), மீனச்சில் (கோட்டயம்), கொத்தமங்கலம் (எரணாகுளம்) ஆகிய ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கேராளாவில், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மந்திரி அலுவலக அறிக்கையின்படி, கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு மற்றும் கல்லார்குட்டி அணைகளின் சுற்றுவட்டாரத்தில் ரெட் அலர்ட் மற்றும் திருச்சூர் மாவட்டம் பெரிங்கல்குத் அணை அருகே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஒவ்வொரு குழு தயார் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.