வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை

பெங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-08-13 21:40 GMT

பெங்களூரு: பெங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மூதாட்டி கொலை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ (வயது 70). இவரது கணவர் இறந்து விட்டார். ஜெயஸ்ரீயின் மகன் ஒருவர் கனடா நாட்டில் வசிக்கிறார். இதன் காரணமாக ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஜெயஸ்ரீக்கு சொந்தமான 4 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர் செலவு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஜெயஸ்ரீயின் வீட்டுக்கதவு திறந்து கிடந்தது.

அவரது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண் உள்ளே சென்று பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா விரைந்து சென்று கொலையான ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

நகை, பணம் கொள்ளை

அப்போது ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டியும், அவரது கழுத்தை நெரித்தும் மா்மநபா்கள் கொலை செய்திருந்தது தெரிந்தது. அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரை கொன்றுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

ஜெயஸ்ரீ தனியாக வசிப்பதை அறிந்த நபர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்