அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் பயங்கரவாதி ஷாரிக்கிற்கு 25 நாட்கள் தொடர் சிகிச்சை

குண்டு வெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு 25 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-23 22:07 GMT

மங்களூரு: குண்டு வெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு 25 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பயங்கரவாதி ஷாரிக்

மங்களூரு பம்ப்வெல் மேம்பால பகுதியில் குக்கர் குண்டை வெடிக்க செய்ய திட்டமிட்டு ஷாரிக் நாகுரி பகுதியில் இருந்து ஆட்டோவில் எடுத்துச் சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த குக்கர் குண்டு கங்கனாடி போலீஸ் நிலையம் பகுதி மகாபலேஸ்வரர் கோவில் அருகில் வெடித்து தீப்பிடித்தது.

அந்த குக்கர் குண்டுவில் இணைத்திருந்த டெட்டனேட்டர் வெடிக்கவில்லை. அது வெடித்து இருந்தால் பெருத்த அழிவை உண்டாக்கி இருக்கும். இருப்பினும் குக்கரில் இருந்து ஜெல் வெடிப்பொருள் தீப்பிடித்து எரிந்ததில் குக்கரின் மூடி ஷாரிக்கின் தாடையையும், கன்னத்தையும் தாக்கியது. இதில் அவரது ஒரு கண் பலத்த காயம் அடைந்துள்ளது.

45 சதவீத தீக்காயம்

மேலும் வெடித்த குக்கரை கையில் வைத்திருந்ததால் அவரது கை, கால்களின் விரல்களிலும் பலத்த காயம் உண்டாகி இருக்கிறது. மொத்தத்தில் அவர் 45 சதவீத தீக்காயம் அடைந்துள்ளார். முதலில் வென்லாக் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பாதர் முல்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 8 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் அவரை நேரில் பார்வையிட்ட மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார், ஷாரிக்கின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறியிருந்தார். இதனால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாமல் போலீசார் காத்து இருந்து வருகிறார்கள்.

அபாய கட்டத்தை தாண்டினார்

இதுகுறித்து மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், "குண்டுவெடிப்பில் காயம் அடைந்த ஷாரிக்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. அவர் குணமானதும், குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்" என்றார்.

25 நாட்கள் தொடர் சிகிச்சை

குக்கர் வெடிகுண்டில் ஜெல் மட்டும் தீப்பிடித்து புகை மண்டலமாகியதால், அவரது நுரையீரலை அந்த நச்சு புகை தாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காகவும், தீக்காயங்கள் குணமாகவும் 25 நாட்கள் ஆகும் என்றும், 25 நாட்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்