தேர்தலின்போது கோவிலுக்கு செல்வார்; தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தியின் இந்து எதிர்ப்பு முகம் வெளிப்படும்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

தேர்தலின்போது கோவிலுக்கு செல்வதும், தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தியின் உண்மையான இந்து எதிர்ப்பு முகம் வெளிப்படுவதும் சகஜம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.

Update: 2022-09-10 09:41 GMT

புதுடெல்லி,



காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் வரை 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

அவரது 3-வது நாள் பாதயாத்திரை நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று 4-வது நாளாக அவர் தனது பாதயாத்திரையை தொடர்ந்து உள்ளார். தனது பயணத்தின் இடையே அவர் பல்வேறு நபர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், தமிழக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவரை ராகுல் காந்தி புலியூர்குறிச்சியில் உள்ள முட்டிடிச்சான் பாறை கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், இயேசு கிறிஸ்து கடவுளின் ஒரு வடிவம்? அது சரியா? என அவரிம் ராகுல் காந்தி கேட்கிறார். அதற்கு ஜார்ஜ் பொன்னையா பதிலளிக்கும்போது, அவரே உண்மையான கடவுள் என கூறுகிறார்.

தொடர்ந்து அவர், கடவுள் தன்னை ஆணாக வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையான ஒரு மனிதராக... சக்தியை போன்று அல்ல... அதனால், நாம் ஒரு மனிதரை பார்க்கிறோம் என பொன்னையா கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் தூண்டி விடும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய அனுபவம் பொன்னையாவுக்கு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், மதுரையின் கள்ளிக்குடி பகுதியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தி.மு.க. மந்திரி மற்றும் பிறருக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்து சமூகத்தினரை இலக்காக கொண்டும் அவர் வெறுப்புணர்வுடன் பேசியதற்காக அவர் மீது கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடனான ராகுல் காந்தி பேசும் வீடியோ பற்றி பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, இது முதன்முறையல்ல. இந்து மதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இதுபோன்ற தரக்குறைவான குறிப்புகளை வெளியிடுவது பல முறை நடந்துள்ளன. அது கடவுள் ராமரை நிரூபிக்க கூறி வலியுறுத்தியது ஆகட்டும் அல்லது இந்த, தாய் சக்தி விவகாரம் ஆகட்டும் என கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தி கோவில்களுக்கு வருகை தந்து கேலிக்கூத்துகளை உருவாக்குவார். தேர்தல் முடிந்த பின்னர், அவரது இந்த நகைச்சுவை நாடகம் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அவரது உண்மையான முகம், இந்து எதிர்ப்பு முகம் வெளிச்சத்திற்கு வரும் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்