கடுமையான உழைப்பே வெற்றியின் ரகசியம்
கடுமையான உழைப்பே வெற்றியின் ரகசியம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா:-
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி முதல்நிலை கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
மாணவ பருவம் மிக அழகானது. இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்களின் பொறுப்புகளை அறிந்து படிக்க வேண்டும். மாணவ பருவத்தில் முதலில் பாடம் கற்க வேண்டும், அதன் பிறகு தேர்வு எழுத வேண்டும். வாழ்க்கையில் முதலில் பரீட்சையை எதிர்கொண்டு, அதன் பிறகு பாடம் கற்க வேண்டிய நிலை உள்ளது. எல்லா செயல்களையும் நேர்மறையாக எடுத்து கொள்ள வேண்டும். மலைநாடு பகுதியை சேர்ந்த குழந்தைகள் அறிவாளிகள். சர்வதேச அளவில் போட்டி போடும் அளவுக்கு குழந்தைகள் தயாராக வேண்டும். ஏன், எப்படி, எவ்வளவு, எங்கே என்று கேள்விகளை கேட்டு அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பே வெற்றியின் ரகசியம். மாணவர்களாகிய நீங்கள் வளர்ந்து உயரத்திற்கு சென்ற பிறகு தங்கள் ஊர் மற்றும் படித்த கல்வி நிறுவனத்திற்கு பங்களிப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.