போலீசிடமிருந்து தப்பிக்க கோர்ட்டு மாடியில் இருந்து குதித்த 'பலே திருடன்' - பரபரப்பு சம்பவம்

கோர்ட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து போலீசிடமிருந்து தப்பிக்க முயன்ற திருடனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-02 05:34 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை குடோனில் இருந்து நெய்யப்படாத துணி (துணி ரோல்) கடந்த மாதம் 8-ம் தேதி திருடுபோனது. இதை பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூகுமார் (வயது 28) தனது கூட்டாளியுடன் சேர்ந்து டெம்போவில் திருடிச்சென்றனர்.

ஆனால், வேறு ஊருக்கு திருடிய துணியை கொண்டு சென்றபோது அந்த டெம்போவை வாகனசோதனையின்போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், டெம்போவில் இருந்து குதித்து ராஜூகுமார் தப்பியோடிவிட்டார்.

இதனை தொடர்ந்து டெம்போ டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜூகுமாரின் இருப்பிடத்தை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜூகுமாரை போலீசார் நேற்று குருகிராமில் உள்ள முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜூகுமாரை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

வழக்கு நடைபெற்ற கோர்ட்டின் முதல் மாடியில் இருந்து ராஜூகுமாரை வாகனத்திற்கு போலீசார் அழைத்துவந்தனர். அப்போது, திடீரென போலீசாரிடமிருந்து தப்பிக்க ராஜூகுமார் கோர்ட்டின் முதல் மாடியில் இருந்து கிழே குதித்துள்ளார்.

ஆனால், முதல் மாடியில் இருந்து குதித்த ராஜூகுமாரின் கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் தப்பித்துஓட முடியவில்லை. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட போலீசார் தப்பியோட முயன்ற ராஜூகுமாரை பிடித்தனர்.

தப்பிக்க முயன்று கோர்ட்டு முதல்மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த ராஜூகுமாரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், திருட்டு வழக்குடன் சேர்த்து ராஜூகுமார் மீது தப்பியோட முயன்றதாக மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். போலீசிடமிருந்து தப்பிக்க கோர்ட்டு முதல் மாடியில் இருந்து குதித்த 'பலே திருடனால்' அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.       

Tags:    

மேலும் செய்திகள்