குஜராத்: 'காதி உத்சவ்' நிகழ்ச்சியில் ராட்டையில் நூல் நூற்ற பிரதமர் மோடி...!
அகமதாபாத்தில் நடைபெற்ற ‘காதி உத்சவ்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டை சுற்றினார்.
அகமதாபாத்,
இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம், சுதந்திர தின அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் 'காதி உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தின் போது காதி மற்றும் அதன் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் 'காதி உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் 7 ஆயிரத்து 500 பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் ராட்டையில் நூல் நூற்றனர். பிரதமர் மோடியும் அவர்களோடு இணைந்து ராட்டை சுற்றி நூல் நூற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையோட்டி, 7 ஆயிரத்து 500 சகோதரிகள் மற்றும் மகள்கள் ராட்டையில் நூல் நூற்பு செய்து வரலாறு படைத்துள்ளனர். ராட்டையை சுற்றுவது என்னை குழந்தை பருவத்திற்கு கொண்டு சென்றது.
'காதி' சுதந்திர இயக்கத்தின் சக்தியாக மாறி அடிமைச் சங்கிலிகளை உடைத்ததை நாம் பார்த்தோம். அதே காதி இந்தியாவை வளர்ச்சியடைய செய்வதற்கும், தன்னிறைவு பெறுவதற்கும் உத்வேகமாக அமையும்.
சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகளால் 'காதி'நாட்டின் சுயமரியாதை சின்னமாக மாற்றப்பட்டது. ஆனால், அதே 'காதி' சுதந்திரத்திற்கு பிறகு தாழ்வாக பார்க்கப்பட்டது. இத்தகைய சிந்தனையால் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் அழிந்தன". இவ்வாறு அவர் பேசினார்.