குஜராத்: ஆஸ்பத்திரியில் தீ விபத்து - 125 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றம்

ஆஸ்பத்திரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-07-30 22:51 GMT

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. 10 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.

சமீபத்தில் ஆஸ்பத்திரியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கின. இதையொட்டி ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்பட்டு வந்த ஏராளமான பொருட்கள் கட்டிடத்தின் அடித்தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. அடித்தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தீப்பிடித்து பெரும் புகை உண்டானது.

இதனிடையே மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கு பரவ தொடங்கியது. இதனால் ஆஸ்பத்திரி முழுவதும் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். எனினும் அடித்தளத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி கொண்டே இருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

அதன்படி ஆஸ்பத்திரியில் இருந்த 125 நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்கள் அனைவரும் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்