குஜராத் பால விபத்து; பா.ஜ.க.வுடன் உள்ள உறவால் தப்பிய பொறுப்பாளர்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு
குஜராத் பால விபத்து சம்பவத்தில் பா.ஜ.க.வுடன் உள்ள உறவால் உண்மையான பொறுப்பாளர்கள் தப்பியுள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜ்கோட்,
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த அக்டோபர் 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
ஆனால், பாலம் திடீரென கடந்த அக்டோபர் 30-ந்தேதி மாலை இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. 177 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்-மந்திரி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.
இதன்பின்பு, சம்பவ பகுதிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வழக்கில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில், போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றி கூடுதல் அரசு வழக்கறிஞரான எச்.எஸ். பஞ்சால் கூறும்போது, 4 பேரில் 2 பேர் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள். மற்ற 2 பேர் பால பணியில் ஈடுபட்டவர்கள். நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 பேர், பாதுகாவலர்கள் மற்றும் கட்டண சீட்டு வழங்கியவர்கள் ஆவர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோர்பி விபத்தில் 150 பேர் உயிரிழந்தனர். இது ஓர் அரசியல் விவகாரம் அல்ல.
இந்த விபத்துக்கு உண்மையில் பொறுப்பானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எப்.ஐ.ஆர். பதிவும் செய்யப்படவில்லை. இது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், குஜராத் பால விபத்துடன் தொடர்புடைய பொறுப்பாளர்கள் பா.ஜ.க.வுடன் நல்ல முறையிலான உறவை பகிர்ந்துள்ளனர். அதனால், அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை.
2 வாட்ச்மேன்களை பிடித்து, அவர்களை கைது செய்துள்ளனர். ஆனால், உண்மையில் பொறுப்பானவர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரேவா நிறுவனத்தின் 2 மேலாளர்களில் ஒருவர் (கைது செய்யப்பட்டவர்கள்) கோர்ட்டில் கூறும்போது, இது கடவுளின் ஒரு செயல் என குறிப்பிட்டார் என்ற திடுக்கிடும் தகவலை பஞ்சால் தெரிவித்து உள்ளார்.
இந்த பால பராமரிப்பு பணியில், டெண்டர் விடும் நடைமுறையானது பின்பற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, நேரடியாக ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என விசாரணை அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார் என்றும் பஞ்சால் கூறியுள்ளார்.