குஜராத் சட்டசபை தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு

குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-10-31 01:59 GMT

புதுடெல்லி,

குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைவதால் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இந்த 2 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அடுத்த வரும் 5 மாநில தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதிஅறிவித்தது. அதன்படி நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017 -ம் ஆண்டில், இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ந் தேதி ஒரே நேரத்தில் நடைபெற்றது. அதே நடைமுறை தற்போது பின்பற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்