பசுமை எரிசக்தி தங்க சுரங்கத்திற்கு இணையானது: பிரதமர் மோடி உரை

பசுமை எரிசக்தியானது, தங்க சுரங்கத்திற்கு இணையானது என பட்ஜெட்டுக்கு பின்னான முதல் இணையதள கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2023-02-23 07:28 GMT

புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் பருவத்தின்போது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி, அவையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையில், தொடர் அமளியால் முதல் பருவ கூட்டத்தொடர் வருகிற மார்ச் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதன்முறையாக இணையதளம் வழியே நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு பேசுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த உரையின்போது, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்ற பசுமை எரிசக்தி வளர்ச்சியுடன் தொடர்புடைய நோக்கங்களில் கவனம் செலுத்துவது பற்றிய முக்கிய விசயங்கள் இடம்பெறும் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்ட தொடக்க விசயங்களை திறம்பட அமல்படுத்துவதற்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்தது.

நடப்பு 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பின்னான வெபினார்கள் எனப்படும் இணையதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. இதன்படி, 12 தொடராக நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

பட்ஜெட்டில் இடம்பெற்ற 7 முக்கிய அம்சங்களில் ஒன்றான பசுமை எரிசக்தி வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி இன்று பேசினார். அவர் கூறும்போது, நாட்டில் தனியார் துறையை எடுத்து கொள்ளும்போது, ஒரு தங்க சுரங்கம் அல்லது எண்ணெய் வயலுக்கு எந்த வகையிலும் இந்தியாவின் சூரிய சக்தி, காற்று மற்றும் எரிவாயு சக்தியானது குறைந்ததல்ல.

இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆனது, அதிக அளவிலான பசுமை வேலைவாய்ப்புகளை பெரும் அளவில் உருவாக்க வல்லது.

இந்தியாவில் பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையானது, நாட்டின் பசுமை வளர்ச்சி செயல் திட்டத்தின் ஒரு முக்கிய பங்கு ஆகும். நாம் வருகிற நாட்களில் 3 லட்சம் பழைய, பழுதடைந்த வாகனங்களை அழிக்க இருக்கிறோம்.

இந்த பட்ஜெட்டானது இந்தியாவின் வருங்கால பாதுகாப்புக்கான ஒரு வாய்ப்பு ஆகும். பட்ஜெட் கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூட்டாக மற்றும் விரைவாக நாம் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

இந்த மத்திய பட்ஜெட்டானது, பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பரவி கிடக்கிற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் திட்ட தொடக்கங்களை வருங்காலத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை கொண்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பசுமை எரிசக்தி தொடர்புடைய பட்ஜெட் பிரிவுகள், அடுத்த தலைமுறையின் பிரகாசமான வருங்காலத்திற்கான அடிக்கல்லுக்கான ஒரு வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்