இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி; மணிப்பூரின் குகி மற்றும் நாகா குழுக்கள் எதிர்ப்பு

மியான்மரை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார்.

Update: 2024-02-08 01:24 GMT

Photo Credit: PTI

இம்பால்,

மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாலபிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டி 1,643 கிலோமீட்டர் தொலைவுக்கு மியான்மர் எல்லை அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் இந்தியாவை ஒட்டிய மியான்மர் எல்லை பகுதிகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிக்க தொடங்கின. இது இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் மியான்மருடன் 398 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொள்ளும் மணிப்பூரில் கடந்தாண்டு இனக்கலவரம் வெடித்தது. மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளால் வன்முறை தூண்டப்பட்டதாக மணிப்பூர் அரசு குற்றம் சாட்டியது.

இந்த 2 பிரச்சினைகளையும் முன்நிறுத்தி இந்திய-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் மியான்மரை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய மியான்மர் எல்லையில் 10 கி.மீ. தூரத்துக்கு ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையாக வேலி அமைக்கும் மத்திய அரசின் முடிவை மணிப்பூரின் மெய்தி இன குழுக்கள் வரவேற்றுள்ளன. எல்லையில் வேலி அமைக்க வேண்டும் என்பது மெய்தி இன குழுக்களின் நீண்டகால கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மணிப்பூரில் உள்ள குகி மற்றும் நாகா இன குழுக்கள் எல்லையில் வேலி அமைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்