இலங்கை விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சிக் கூட்டதிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2022-07-17 10:10 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. வருகிற ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பொருளாதார நெடுக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். முக்கியமாக இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் நிலைகுறித்து கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க வருகிற செவ்வாய்க் கிழமை மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடி நிலை தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் விளக்கமளிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்