சார்மடி மலைப்பாதையில் நள்ளிரவில் அரசு பஸ் பழுது: நடுகாட்டில் 4 மணி நேரம் பரிதவித்த பயணிகள்
சார்மடி மலைப்பாதையில் நள்ளிரவில் அரசு பஸ் பழுதானதால் 78 பயணிகள் நடுகாட்டில் 4 மணி நேரம் பரிதவித்தனர். ‘எக்ஸ்’ தளத்தில் அளித்த புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிக்கமகளூரு-
சார்மடி மலைப்பாதையில் நள்ளிரவில் அரசு பஸ் பழுதானதால் 78 பயணிகள் நடுகாட்டில் 4 மணி நேரம் பரிதவித்தனர். 'எக்ஸ்' தளத்தில் அளித்த புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பழுதான அரசு பஸ்
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் இருந்து வடகர்நாடக மாவட்டமான கதக்கிற்கு தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சிக்கமகளூருவில் உள்ள சார்மடி மலைப்பாதை வழியாக இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தர்மஸ்தலாவில் இருந்து கதக் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 78 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த அரசு பஸ் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சார்மடி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த பஸ் பழுதானது. நள்ளிரவில் நடுகாட்டில் பஸ் பழுதானதால் பயணிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர்.
எக்ஸ் தளத்தில் புகார்
இதையடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், தர்மஸ்தலா மற்றும் புத்தூரில் உள்ள அரசு பஸ் பணிமனைக்கு தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், அவர்களால் பணிமனை அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த பயணிகள், நடுகாட்டில் பரிதவித்து நின்றனர். சிலர் சாலையோரம் தாங்கள் கொண்டு வந்த பையுடன் படுத்து ஓய்வெடுத்தனர். கடும் குளிரிலும், வனவிலங்குகள் அச்சத்திலும் பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தனர்.
அந்த வழியாக வந்த சில வாகனங்களும், பயணிகளின் பாதுகாப்புக்காக சிறிது நேரம் நின்றன. இதையடுத்து அந்த பஸ்சில் வந்த பயணி ரகு என்பவர், இந்த சம்பவம் குறித்து தனது 'எக்ஸ்' (டுவிட்டர்) தளம் மூலம் கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு புகார் அளித்தார். அதில், சாலையோரம் பயணிகள் படுத்திருக்கும் படத்தையும் பதிவு செய்திருந்தார்.
மாற்று ஏற்பாடு
பயணி ரகுவின் புகாருக்கு உடனடியாக பதில் அளித்த கே.எஸ்.ஆர்.டி.சி. மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியது. இதையடுத்து புத்தூர் பணிமனைக்கு தொடர்புகொண்டு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு டிரைவர் இல்லை என தெரிகிறது. இதையடுத்து சார்மடி மலைப்பாதையில் பழுதாகி நின்ற அரசு பஸ்சின் டிரைவரை தர்மஸ்தலாவுக்கு அனுப்பி பஸ்சை எடுத்து வர முடிவு செய்யப்பட்டது.
அதன்பின்னர் சார்மடி மலைப்பாதை வழியாக தர்மஸ்தலாவுக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறி டிரைவர் ஏறி சென்றார். பின்னர் அவர் தர்மஸ்தலாவுக்கு சென்று அரசு பஸ்சை எடுத்து கொண்டு உடனடியாக புறப்பட்டார். அதிகாலை 5 மணி அளவில் டிரைவர் பஸ்சுடன் சார்மடி மலைப்பாதைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கதக் நோக்கி புறப்பட்டு சென்றார்.
கடும் கண்டனம்
நடுரோட்டில் பஸ் பழுதானதால் நடுகாட்டில் பயணிகள் 4 மணி நேரம் பரிதவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பழுதான பஸ்சை இயக்குவதாக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் எழும்பி உள்ளது. மேலும், எக்ஸ் தளத்தில் புகார் அளித்த வாலிபருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.