சட்டத்தை முடக்க கவர்னருக்கு அதிகாரமில்லை: சுப்ரீம் கோர்ட்டு

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-12-01 07:41 GMT

புதுடெல்லி,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, முதல்முறை மசோதா அனுப்பும்போதே அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி இருக்கலாமே என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுவைத்துவிட்டு, மறு நிறைவேற்றம் செய்த பின் ஜனாதிபதிக்கு அனுப்பியது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார். மசோதாக்களை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பாததால் அவர் தரப்பில் குழப்பம் உள்ளது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அப்போது, அரசியல் சாசன அடிப்படையில் மசோதாவை கிடப்பில் வைத்திருக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, கவர்னர் மற்றும் முதல் அமைச்சர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது என்று தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக முதல் அமைச்சருக்கு கவர்னர் அழைப்பு விடுத்து, அமர்ந்து பேசி தீர்வு காணவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்