பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் : மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு திரும்பப்பெறப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

Update: 2024-01-30 19:37 GMT

புதுடெல்லி,

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடர் வருகிற 9-ந் தேதி வரை நடைபெறும்.

இது, நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து உள்ளன. இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது.

அதன்பேரில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை மந்திரியும், மக்களவை பா.ஜனதா துணைத்தலைவருமான ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சுரேஷ், எம்.பி. பிரமோத் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதீப் பந்தோபாத்யாய், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனாவின் ராகுல் ஷெவாலே, சமாஜ்வாடி கட்சியின் எஸ்.டி.ஹாசன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்நாத் தாக்கூர், தெலுங்குதேசம் கட்சியின் ஜெயதேவ் கல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்

இதனிடையே இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் 132 பேரின் இடை நீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்தநிலையில் சிறப்புரிமை குழுவின் பரிசீலனையில் உள்ள 14 எம்.பி.க்கள் இன்று (புதன்கிழமை) தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமா என்ற நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில் நாடாளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு திரும்பப்பெறப்படும். இது தொடர்பாக அரசு சார்பில் சபாநாயகர் மற்றும் மேல் சபை தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், இந்த கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் எந்த பதாகைகளையோ அல்லது அதுபோன்ற பொருட்களையோ அவைகளுக்குள் கொண்டு வரக்கூடாது என்ற முடிவை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்