அதானி நிறுவன விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் ஏன்? - காங்கிரஸ் கட்சி கேள்வி

அதானி நிறுவன விவகாரத்தில் பிரதமர் மோடி உரத்த மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2023-02-05 23:45 GMT

புதுடெல்லி,

கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி வெளியிட்ட அறிக்கை, நம் நாட்டில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. பங்குச்சந்தையில் பெரும் சரிவுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதுடன், கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது.

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அதானி நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மோடி அரசு மவுனத்தை கடைப்பிடித்து வருவது ஏன்? 2016-ம் ஆண்டு, ஏப்ரல் 4-ந் தேதி பனாமா ஆவணங்கள் கசிவு விவகாரம் அம்பலமானபோது, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில், கடல் கடந்த வரி புகலிடங்களிலிருந்து வரும் பண வரவுகளை கண்காணிக்க பல நிறுவன விசாரணை குழுவை முடுக்கி விட்டுள்ளதாக அப்போது நிதி அமைச்சகம் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ந் தேதி சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில், நீங்கள் (மோடி), பொருளாதார குற்றவாளிகளுக்கான பாதுகாப்பு புகலிடங்களை அகற்றவும், பணமோசடி செய்பவர்களைக் கண்டுபிடித்து நிபந்தனையின்றி நாடு கடத்தவும், சிக்கலான சர்வதேச வலையை உடைக்கவும் நாம் செயல்பட வேண்டும் என்று கூறினீர்கள். இது உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் மறைக்க முடியாத சில கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.

நேர்மை

கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானியின் பெயர், பனாமா ஆவண கசிவில், பண்டோரா ஆவண கசிவில் இடம்பெற்றது. அதில் அவர் ஹாமாஸ் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் கடல் கடந்த நிறுவனங்களை இயக்குபவர் என கூறப்பட்டிருந்தது. அவர் கடல் கடந்த ஷெல் நிறுவனங்களின் (பெயரளவில் செயல்படும் நிறுவனங்கள்) ஒரு பரந்த தளம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஊழலை எதிர்த்து போராடுவதில் உங்கள் நேர்மை மற்றும் நோக்கம் பற்றி நீங்கள் அடிக்கடி பேசினீர்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் எடுத்தீர்கள்.

உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழில் நிறுவனம் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்கிறபோது, உங்கள் விசாரணைகளின் தரம் மற்றும் நேர்மையைப் பற்றி எங்களிடம் கூறுவது என்ன?

அதானி நிறுவனங்கள் இன்றியமையாதவையா?

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஏகபோகங்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இவ்வளவு காலம் தீவிர விசாரணையில் இருந்து தப்பி இருப்பது எப்படி சாத்தியம்?

இத்தனை ஆண்டுகளில் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று கூறி ஆதாயம் பெற்ற ஆட்சிக்கு அதானி குழுமம் இன்றியமையாததா?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்