முல்லையன்கிரி மலையில் மலையேற்றம் செய்த அரசு அதிகாரிகள்
சிக்கமகளூரு திருவிழாவில் பணியில் ஈடுபட உள்ள அரசு அதிகாரிகளுக்கு முல்லையன்கிரி மலையில் மலையேற்றம் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சிக்கமகளூரு திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு விற்பனை கடைகள் என விழா கோலம் பெற தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் சிக்கமகளூரு திருவிழாவின்போது அரசு அதிகாரிகள் பலரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிறிது ஓய்வு வழங்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை முல்லையன்கிரி மலைக்கு மலையேற்றம் அழைத்து சென்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவர்கள் சிக்கமகளூருவில் இருந்து கைமரம் பகுதி வந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து முல்லையன்கிரி மலை வரை சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கடந்தனர். பின்னர் முல்லையன்கிரி மலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அவர் கைமரம் பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து சிக்கமகளூருவுக்கு புறப்பட்டனர். மலைப்பகுதியில் மலையேற்றம் செய்தது புத்துணர்ச்சி அளித்ததாக அங்கு வந்த அதிகாரிகள் கூறினர்.