இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்
இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில்,
இந்திய அரசு அனைத்து மதங்களையும் உச்சபட்ச மரியாதையை அளிக்கிறது. தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கட்சிகளால் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.