"அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உத்தரவிட முடியாது" - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-26 23:34 GMT

புதுடெல்லி,

மீண்டும் பணி வழங்கக்கோரி மக்கள்நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 13 ஆயிரத்து 500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, 'மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7,500 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவை பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளனர். 10,375 பேர் தமிழக அரசின் முன்மொழிவை ஏற்று பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்' என வாதிட்டார்.

அப்போது, 'தமிழக அரசின் முன்மொழிவுகளுக்கு எத்தனை பேர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்?' என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, 'சுமார் ஆயிரம் பேர் தமிழக அரசின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவில்லை' என விழுப்புரம் மாவட்ட மக்கள்நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் தனராஜ் தரப்பு வக்கீல் ஹரிப்பிரியா வாதிட்டார்.

உடனே நீதிபதிகள், 'அரசு காலிப்பணியிடங்களை அதற்குரிய சட்ட விதிகளுடன் நிரப்ப வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற பாணியில் அரசுப்பணியை கோர முடியாது. அரசின் முன்மொழிவை ஏற்று பணியில் சேருங்கள், இல்லையெனில் அதை எதிர்த்து வழக்காடுங்கள்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆலோசனை பெற்று தெரிவிக்கப்படும் என அறிக்கை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்