பெங்களூரு ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது
பெங்களூரு 2-வது முனையத்தின் தொடக்க நாளில் ரூ.3¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் வழியாக தங்கம், போதைப்பொருட்கள் கடத்தல் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. அன்றைய தினம் துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.3¼ கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது தெரிந்துள்ளது.
அதாவது துபாயில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணிகள் 3 பேரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களது ஆடைகளுக்குள் பற்பசை வடிவில் தங்கம் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.3¼ கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கம் கடத்தியதாக 3 பெண்களை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் தொடக்க நாளில் ரூ.3¼ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.