21-ம் நூற்றாண்டில் சர்வதேச வளர்ச்சி தென்பகுதி நாடுகளிடம் இருந்து வரும்: பிரதமர் மோடி

உங்களுடைய குரலே, இந்தியாவின் குரல் என்றும் உங்களுடைய முன்னுரிமையே, இந்தியாவின் முன்னுரிமை என்றும் பிரதமர் மோடி சர்வதேச தெற்கு உச்சிமாநாட்டில் பேசியுள்ளார்.

Update: 2023-01-12 07:03 GMT



புதுடெல்லி,


உலக நாடுகள் ஒரு பெருந்தொற்று பரவலில் சிக்கி இரண்டரை ஆண்டுகளாக பொருளாதாரம், வளர்ச்சி நிலை ஆகியவற்றில் பின்தங்கி போயுள்ள சூழலில், சர்வதேச அளவில் தென்பகுதியில் அமைந்த நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.

இதன்படி, சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசி வருகிறார். இந்த மாநாட்டில் வளர்ந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என 120 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில், சர்வதேச அளவில் தென்பகுதியில் அமைந்த நாடுகள் கூட்டாக இணைந்து தங்களது நோக்கங்கள் மற்றும் முக்கியம் வாய்ந்த விசயங்களை பொதுதளம் ஒன்றில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இதன்படி, ஒரே குரல், ஒரே நோக்கம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்தியா ஓராண்டுக்கான ஜி-20 தலைமையை ஏற்றதன் பின்னர் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, போர், மோதல், பயங்கரவாதம் மற்றும் புவிஅரசியல் பதற்றங்கள், உயர்ந்து வரும் உணவு, உரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற கடினம் வாய்ந்த மற்றொரு ஆண்டின் பக்கங்களை நாம் கடந்து வந்துள்ளோம்.

இவற்றில் பெருமளவிலான சர்வதேச சவால்கள் சர்வதேச தென்பகுதி நாடுகளால் உருவாக்கப்படவில்லை. ஆனால், அவை நம்மை பாதித்தன. உலகளாவிய தென்பகுதி நாடுகள் வருங்காலத்திற்கான பெரும் பங்குகளை கொண்டுள்ளன. மனிதஇனத்தின் 4-ல் 3 பங்கு மக்கள் நமது நாடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

வளர்ச்சிக்கான அனுபவ விசயங்களை எப்போதும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு இந்தியா பகிர்ந்து வந்துள்ளது என பிரதமர் மோடி தனது பேச்சின்போது கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, வெளிநாட்டு விதிகளுக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் ஆதரவு தெரிவித்து கொண்டோம். இந்த நூற்றாண்டிலும் இதனை மீண்டும் நாம் செய்ய முடியும். அதனால், நமது குடிமக்களின் நலன்கள் உறுதி செய்யப்பட்டு, ஒரு புதிய உலக நாடுகளின் வரிசை உருவாக்கப்படும்.

உங்களுடைய குரலே, இந்தியாவின் குரல் என்றும் உங்களுடைய முன்னுரிமையே, இந்தியாவின் முன்னுரிமை என்றும் அவர் பேசியுள்ளார்.

வளர்ந்து வரும் நாடுகள் சவால்களை சந்தித்தபோதும், நம்முடைய நேரம் வந்து கொண்டிருக்கின்றது என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நமது சமூகங்கள் மற்றும் பொருளாதார நிலைகள் மாற்றம் பெற கூடிய வகையிலான எளிய, அளவிடத்தக்க மற்றும் நீடித்த தீர்வுகளுக்கான விசயங்களை அடையாளம் காண வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்