புதிய மின் இணைப்பு கொடுக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய செஸ்காம் அதிகாரி கைது
புதிய மின் இணைப்பு கொடுக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய செஸ்காம் அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
குடகு,-
புதிய மின் இணைப்பு கொடுக்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய செஸ்காம் அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
ரூ.5 லட்சம் லஞ்சம்
குடகு மாவட்டம் மடிகேரியில் செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம்) அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசோக். இந்த நிலையில் குஷால்நகரை சேர்ந்த பிரதாப் என்பவர், வாகன சார்ஜிங் மையம் திறக்க முடிவு செய்திருந்தார். இதற்காக புதிய மின் இணைப்பு கேட்டு செஸ்காம் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த அசோக், ரூ.5 லட்சம் கொடுத்தால் புதிய மின் இணைப்பு கொடுப்பதாக பிரதாப்பிடம் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.
செஸ்காம் அதிகாரி கைது
இதையடுத்து லோக் அயுக்தா போலீசார், செஸ்காம் அதிகாரி அசோக்கை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி பிரதாப்பிற்கு சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் கூறியபடி, பிரதாப், செஸ்காம் அதிகாரி அசோக்கை சந்தித்து ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். இதற்கு அசோக் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பிரதாப், ரூ.2 லட்சத்தை அதிகாரி அசோக்கிடம் கொடுத்தார். அந்த பணத்தை அசோக் வாங்கினார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசாா், செஸ்காம் அதிகாரி அசோக்கை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.