மத்தியபிரதேசத்தை உலுக்கிய சிறுமி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை
மத்தியபிரதேசத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர சாலையில் 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்துடன் உடலில் ரத்தம் சொட்ட, சொட்ட வீடு வீடாக சென்று உதவி கோரும் நெஞ்சை நொறுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி ரத்தம் வடிய ஒவ்வொரு வீடாக கதவை தட்டி உதவி கோரியுள்ளார். ஆனால் யாரும் சிறுமிக்கு உதவ முன்வரவில்லை. மாறாக அவளை விரட்டியடித்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரமாக உதவி கேட்டு சுற்றிதிரிந்த சிறுமி, ஒரு கட்டத்தில் சாலையில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. பின்னர் ஆசிரம நிர்வாகிகள் சிலர் சிறுமியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவள் மன அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட காலம் எடுக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுமியை பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை.
இந்த நிலையில் மத்தியபிரதேசத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளோம். அவரது ஆட்டோவில் பயணிகள் இருக்கையில் ரத்த கறைகள் இருப்பதை கண்டோம். இது குறித்து அவரிடம் விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.