ஓடும் ரெயில் மீது கல் வீச்சு - சிறுமி படுகாயம்
பாலக்காடு அருகே ரெயிலில் மர்மநபர்கள் கல் வீசியதில் சிறுமி படுகாயமடைந்தார்
பாலக்காடு:
கோட்டயம் மாவட்டம் பாம்பாடி பகுதியில் வசிப்பவர் ராஜேஷ். இவரது மகள் கீர்த்தனா (வயது 12). இவள் பாம்பாடி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். ராஜேஷ் தனது குடும்பத்தினடன் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று முன்தினம் இரவு மங்களாபுரம்-திருவனந்தபுரம் ரெயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கீர்த்தனா ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள். எடக்காடு ரெயில் நிலையம் அருகே வந்த போது, மர்ம நபர்கள் ரெயில் மீது கல் வீசினர். இந்த சம்பவத்தில் கீர்த்தனாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவள் வலியால் அலறி துடித்தாள். உடனே அருகில் இருந்தவர் சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தினர்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் விசாரித்த போது, ரெயில் மீது கல் வீசியது தெரியவந்தது. படுகாயம் அடைந்த கீர்த்தனா ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.