பெங்களூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.45 லட்சம் கஞ்சா சிக்கியது
சினிமா பட பாணியில் பெங்களூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.45 லட்சம் கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
சினிமா பட பாணியில் பெங்களூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.45 லட்சம் கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
ஆந்திர மாநிலம் மதுவனப்பள்ளி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் வழியாக பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிந்தாமணி டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த சரக்கு ஆட்டோவில் புதிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை வெளியே எடுத்துவிட்டு போலீசார் சோதனையிட்டனர். அப்போது பெரிய, பெரிய பண்டல்கள் இருந்தன. அவற்றை போலீசார் பிரித்து பார்த்த போது, அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
சினிமா பட பாணியில்...
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில், இவ்வாறு தான் வாகனத்தின் அடியில் பதுக்கி சந்தன மரக்கட்டைகளை கடத்தி வரும் காட்சிகள் இடம் பெற்றி இருக்கும். அதுபோல் சரக்கு ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுவனப்பள்ளி அருகே சந்த்ரா நகரைச் சேர்ந்த ஸ்ரீராமுலு(வயது 27) என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து பல்வேறு கஞ்சா வியாபாரிகளுக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.
ரூ.45 லட்சம் மதிப்பு
அதையடுத்து போலீசார் ஸ்ரீராமுலுவை கைது செய்தனர். அவரிடமிருந்து 154 கிலோ கஞ்சா மற்றும் அவற்றை கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது சைபர் கிரைம், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.45 லட்சம் இருக்கும் என்றும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.