விநாயகர் சிலை ஊர்வலங்கள் போலீசார் சொல்லும் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும்; கலெக்டர் செல்வமணி அறிவுறுத்தல்

சிவமொக்கா மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் போலீசார் சொல்லும் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செல்வமணி கூறினார்.

Update: 2022-08-27 16:22 GMT

சிவமொக்கா;

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

கர்நாடகத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் செல்வமணி தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அனைவரும் கொண்டாடவே நம் முன்னோர்கள் பண்டிகைகள், விழாக்களை ஏற்படுத்தி உள்ளனர். பிற மதத்தினரின் மனதை நோகச்செய்வது கூடாது. மனித நேயத்துடன் விழாக்களை கொண்டாட வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடந்த 15-ந் தேதி சிவமொக்காவில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது. அந்த சம்பவத்தால் பதற்றம், இருபிரிவினர் இடையே மோதல் என பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விநாயர் சதுர்த்தி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செய்யப்பட்டு உள்ளது. பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சிக்கல்களில்...

விநாயகர் சிலை ஊர்வலங்களும், அதை கரைக்கும் இடமும் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடக்க வேண்டும். போலீசார் கூறும் பாதைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். மாற்றுப்பாதையில் சென்று சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்