நாட்டில் குடும்ப ஆட்சி முறையை உருவாக்கியது காங்கிரஸ் தான் - அசாம் முதல்-மந்திரி தாக்கு
காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது" என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார்.
கவுகாத்தி,
அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. அவர்கள் காலாவதியாகிப் போன மருந்துகள். அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவே முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களை எதிர்க்கட்சியாக உணர்வதே இல்லை. பெயரளவிற்கே எதிர்க்கட்சியாக இருக்கும் அவர்கள் தாங்களே ஆளும் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் குடும்ப ஆட்சி முறையை காங்கிரஸ் தான் உருவாக்கியது என்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார்.