குடும்ப கஷ்டத்தால் விரக்தி: விஷம் குடித்து மூதாட்டி-மகள்கள் தற்கொலை
செல்லக்கெரே அருகே குடும்ப கஷ்டத்தால் விரக்தி அடைந்து விஷம் குடித்து மூதாட்டி-மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு;
குடும்ப கஷ்டம்
சித்ரதுர்கா மாவட்டம் ெசல்லக்கெரே தாலுகா கோப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திப்பஜ்ஜி(வயது 75). இவரது கணவர் கெஞ்சப்பா, கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். திப்பஜ்ஜிக்கு தியாமண்ணா(வயது 47) என்ற மகன் இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் அவரும் உயிரிழந்தார். மேலும் 2 மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் மாரக்கா(45), 2-வது மகள் தியாவம்மா(43). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து, கணவரை பிரிந்து தாய் திப்பஜ்ஜியுடன் வசித்து வந்தனர்.
வீ்ட்டில் 2 ஆண்களை இழந்ததாலும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாலும் திப்பஜ்ஜி, அவரது மகள்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
தற்கொலை
அதன்படி கடந்த 2-ந்தேதி இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு தாய்-மகள்கள் 3 பேரும் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். மறுநாள் காலை(நேற்றுமுன்தினம்) வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதனால் அவர்கள், வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் வீட்டிற்குள் எந்த சத்தமும் இன்றி கதவையும் திறக்கவில்லை. இதனால் செல்லக்கெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் திப்பஜ்ஜி, அவரது மகள்கள் மாரக்கா, தியாவம்மா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
சோகம்
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செல்லக்கெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்து அடக்கம் செய்யப்பட்டது. விசாரணையில், குடும்ப கஷ்டத்தால் விரக்தி அடைந்து தாய்-மகள்கள் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் செல்லகெரேயில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.