கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் தொடங்கியது

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-11 20:18 GMT

பெங்களூரு:

திட்டங்களுக்கு ஒப்புதல்

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் உத்தரவாதங்களை அறிவித்தது. அதாவது அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பி.பி.எல்.(வறுமைக்கு கோட்டுக்கு கீழ் உள்ளோர்) ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி என்பது உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக காங்கிரஸ் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் அரசின் முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே இந்த 5 திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது மந்திரிசபை கூட்டத்தில், இந்த திட்டங்கள் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த 5 திட்டங்களில் முதல் திட்டமாக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் 'சக்தி' திட்டம் 11-ந் தேதி தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திற்கான சக்தி திட்ட தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பெண்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கி சக்தி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பணக்காரர்களின் நலன்

பா.ஜனதாவினர் எப்போதும் பணக்காரர்களின் நலனை தான் காக்கிறார்கள். அதனால் நாங்கள் ஏழை மக்களுக்காக அமல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏழை, நடுத்தர மக்களின் கஷ்டங்களை குறைப்பது தான் எங்களின் நோக்கம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 20 நாட்களில் முதல் உத்தரவாத திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கியுள்ளோம்.

இந்த திட்டத்தின் பயனை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த திட்ட தொடக்க விழா பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா நகரங்களிலும் நடைபெற்றுள்ளன. பெண்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டத்திற்கு சக்தி என்று பெயரிட்டுள்ளோம்.

ஏற்றத்தாழ்வு நீங்கும்

நாட்டின் மக்கள்தொகையில் பெண்களின் பங்கு 50 சதவீதம். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நாடு முன்னேற்றம் அடையாது. நாட்டின் பொதுத்துறைகளில் பெண்களின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது. இது 30 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு அது குறைந்துவிட்டது. இது அமெரிக்காவில் 53 சதவீதம், சீனாவில் 54 சதவீதம், ரஷியா, இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் 57 சதவீதம், வங்காளதேசத்தில் 30 சதவீதமாக உள்ளது. ஏழைகள், நடுத்தர பிரிவினருக்கு உதவி செய்தால், பா.ஜனதா கேலி செய்கிறது. தேவையற்ற கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கும். எந்த நாட்டில் பொதுத்துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதோ அந்த நாடு முன்னேற்றம் அடையும். பா.ஜனதாவினரின் கேலியை கண்டு நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஏழை மக்களுக்கு நாங்கள் ஆற்றும் சேவையை தொடர்ந்து மேற்கொள்வோம்.

இலவச மின்சாரம்

கிரகஜோதி திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்கப்படும். அனைத்து சாதி, மதங்களை சேர்ந்த ஏழை மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் பணிகளை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு சாதி-மதம் கிடையாது. நாங்கள் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது, 165 வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றினால் கர்நாடகம் திவாலாகிவிடும் என்றும், அதனால் இந்த திட்டங்களை அரசு நிறைவேற்றாது என்றும் பா.ஜனதா கூறுகிறது. நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்வோம். இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

ரூ.59 ஆயிரம் கோடி

இந்த உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.59 ஆயிரம் கோடி செலவாகும். நடப்பு ஆண்டில் சில மாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், இந்த ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, யாருக்கு இதை வழங்குகிறோம் என்பது தான் முக்கியம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை வருகிற 1-ந் தேதி தொடங்க உள்ளோம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவாகும். கர்நாடகம் பசி இல்லாத மாநிலமாக மாற வேண்டும். ஏழை மக்கள் மூன்று நேரமும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். பசியின் கஷ்டம் என்ன என்பது ஏழை மக்களுக்கு தான் தெரியும். அது பணக்காரர்களுக்கு தெரியாது.

இடைத்தரகர்கள் கிடையாது

அடுத்த 3 மாதங்களில் கர்நாடக பெண்கள் அனைவருக்கும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். அதுவரை ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி பஸ்களில் பயணிக்கலாம். பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் கிடையாது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் சக்தி திட்டத்தின் இலச்சினையை சித்தராமையா வெளியிட்டார். விழாவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி, பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா, தலைமை செயலாளர் வந்திதா சர்மா, கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புகுமார், ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ., பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. உள்பட பலர் கலந்து கொண்டனர். பெங்களூருவில் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய விழா, ஒரு மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் வினியோகித்த சித்தராமையா

பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்ட தொடக்க விழா நிறைவடைந்ததும், சித்தராமையா பி.எம்.டி.சி. பஸ்சில் விதான சவுதாவில் இருந்து மெஜஸ்டிக்கிற்கு பயணம் செய்தார். அதில் பயணித்த பெண்களுக்கு அவர் சக்தி திட்ட இலவச பயண டிக்கெட் வழங்கி வாழ்த்து கூறினார். அவருடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரி ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் பயணித்தனர்.

பெங்களூரு மட்டுமின்றி மாவட்ட தலைநகரங்களிலும் சக்தி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தாலுகா தலைநகரங்களில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தனர். மொத்தத்தில் இந்த சக்தி திட்ட தொடக்க விழா பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. பஸ்களில் இலவசமாக பயணித்த பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்