பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்தை கைவிடவேண்டும் கர்நாடக அரசுக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மாநில அரசு கைவிடவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மங்களூரு-
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் தனியார் பஸ் நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தை மாநில அரசு கைவிடவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசின் புதிய திட்டம்
கர்நாடகத்தில் மாநில அரசு கடந்த 11-ந் தேதி அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்திற்கு பெண்கள் தரப்பில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அரசு பஸ்களில் பெண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பெண்கள் ஆர்வமாக வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு, புத்தூர் பகுதிகளில் அதிகளவு பெண்கள் அரசு பஸ்களில் பயணித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கடலோர மாவட்டமான இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகம்.
இந்தநிலையில் மாநில அரசு அறிவித்த திட்டத்தால் அனைத்து அரசு பஸ்களும் நிரம்பி வழிய தொடங்கிவிட்டன. சில பஸ்களில் அளவுக்கு அதிகமாக பெண்களை ஏற்றி கொண்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் பெண்களும் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல், இலவசம் என்பதால் அரசு பஸ்களில் ஏறி செல்கின்றனர். இதனால் யாரும், அதிகளவு தனியார் பஸ்களை எதிர்பார்ப்பது இல்லை என்று கூறப்படுகிறது. நெடுந்தூர பயமாக இருந்தாலும், அரசு பஸ்களிலேயே பயணிக்க விரும்புகின்றனர்.
திவாலாகும் தனியார் பஸ் நிறுவனங்கள்
அதன்படி கடந்த 11-ந் தேதி மட்டும் உடுப்பி போக்குவரத்து கழகத்தில் இருந்து புறப்பட்ட பஸ்சில் 940 பெண்கள் பயணித்துள்ளனர். மங்களூருவில் 5,454 பெண்கள் அரசு பஸ்களில் பயணித்துள்ளனர். இவர்களுக்கான பயண செலவு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 155 என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக புத்தூரில் 6,240 பெண்கள் அரசு பஸ்களில் பயணித்துள்ளனர். இதற்கு ரூ.2¼ லட்சம் செலவாகியுள்ளது என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் அரசின் இந்த புதிய திட்டத்தால் தனியார் பஸ் நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது உள்ளூர், வெளியூர் பயணமாக இருந்தாலும் தனியார் பஸ்களை தவிர்த்துவிட்டு, அரசு பஸ்களிலேயே பெண்கள் பயணிக்க விரும்புகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் குறைய தொடங்கிவிட்டது. இதனால் வருவாயும் குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் தனியார் பஸ் நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்று கூறப்படுகிறது.
எனவே மாநில அரசு இந்த புதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய நடைமுறையை அமல்படுத்தவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.