'இந்த கொடூரமான பதவியில் இருந்து என்னை விடுவித்துவிடுங்கள்'; மந்திரி கோரிக்கை
’இந்த கொடூரமான பதவியில் இருந்து என்னை விடுவித்து இந்த பதவியை இவருக்கு கொடுங்கள்’ என்று முதல்-மந்திரியிடம் விளையாட்டுத்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை ஆகிய துறைகளின் மந்திரியாக செயல்பட்டு வருபவர் அசோக் சந்த்நா.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் துங்கர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருபவர் கனேஷ் ஹொக்ரா. இவர் ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
நில பத்திரபதிவு விநியோகத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் தலைமை செயலாளரான குல்தீப் ராங்கா தலையீடுவதாக எம்.எல்.ஏ. கணேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் குற்றஞ்சாட்டினார். மேலும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த போதும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி கடந்த 18-ம் தேதி எம்.எல்.ஏ. கணேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கொடூரமான (மந்திரி பதவி) பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மந்திரி அசோக் சந்த்நா முதல்-மந்திரி அசோக் கெலாட்டிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது துறைகள் அனைத்தையும் குல்தீப் ராங்காவிற்கு கொடுத்துவிடும்படியும் மந்திரி அசோக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அசோக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில், மதிப்பிற்குரிய முதல்-மந்திரி, நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறேன். இந்த கொரூரமான மந்திரி பதவியில் இருந்து என்னை விடுவித்துவிடுங்கள். எனது துறைகள் அனைத்தையும் குல்தீப் ராங்காவிற்கு (முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர்) கொடுத்துவிடுங்கள். ஏனென்றால், எப்படி பார்த்தாலும் அனைத்து துறைகளுக்கும் குல்தீப் தான் மந்திரி. நன்றி' என தெரிவித்துள்ளார்.
அதிகாரியின் ஆதிக்கத்தால் மந்திரி பதவியில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி முதல்-மந்திரியிடம் மாநில மந்திரி கோரிக்கை விடுத்த சம்பவம் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.