டெல்லி: குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன் 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, உடனடியாக கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் கட்டிடத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், படுகாயமடைந்த சிலர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.