முலாயம் சிங் யாதவ் மறைவு: இன்று மாலை சொந்த கிராமத்தில் உடல் தகனம்

முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

Update: 2022-10-11 03:22 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியா கவும் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறை வால் அவதிப்பட்டு வந்தார்.

வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. எனவே உயிர் காக்கும் கருவிகள் துணை கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முலாயமின் உயிரை காக்க டாக்டர்கள் கடுமையாக போராடினர்.

ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.

முலாயம் சிங் யாதவின் மரண செய்தியை அவரது மகனும், மாநில முன்னாள் முதல்-மந்திரியுமானஅகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார்.

இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியான முலாயம் சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 3 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்