முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ரூ.97 கோடி மோசடி
வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாக கூறி முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ரூ.97 கோடி மோசடி செய்தவர் மீது லோக் அயுக்தாவில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு கே.ஆர்.புரம், ராஜீவ்காந்திநகர் பகுதியில் உள்ள தேவசந்திரா வார்டில் மாநகராட்சி சார்பில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டரை பைரதி பசவராஜ் என்ற காண்டிராக்டர் பெற்றார். இந்த நிலையில் அந்த பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் ரூ.97 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் குற்றச்சாட்டு கூறி வந்தார். இந்த நிலையில் கட்டிடம் கட்டியதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி லோக் அயுக்தா அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் கொடுத்த பின்னர், அவர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'முன்னாள் மாநகராட்சி உறுப்பினரும், காண்டிராக்டருமான பைரதி பசவராஜ், அரசு சார்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாக கூறி ரூ.97 கோடி மோசடி செய்துள்ளார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
ராஜீவ்காந்திநகர் பகுதியில் ஒதுக்கிய நிலத்தில் கட்டிடம் கட்டுவதாக கூறி, நாராயண்புராவில் உள்ள பழைய கட்டிடத்தை காட்டி டெண்டர் தொகையை அவர் பெற்றுள்ளார். ஆனால் அந்த பகுதியில் இன்று வரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை. கழிவறை கட்டிடம் கூட கட்டப்படவில்லை' என்றார். இதுதொடர்பாக 8 முக்கிய ஆவணங்களை லோக் அயுக்தாவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.