முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று டெல்லி பயணம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (புதன்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு:
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைப்பதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா, இந்த கூட்டணி தகவலை உறுதி செய்துள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க உள்துறை மந்திரி அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளதாக எடியூரப்பா கூறினார். இதை ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் மறுத்தனர். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று அவர்கள் கூறினார்.
இந்த நிலையில் எடியூரப்பா இன்று (புதன்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்த்துக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் அந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
அதன் பிறகு பா.ஜனதா தலைவர்களை குமாரசாமி சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பின்போது, எத்தனை தொகுதிகள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு கிடைக்கும் என்பது தெரியவரும். பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணியால் இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் உதவியுடன் தென் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.