கள்ளக்காதல் ஜோடி கொலை கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சிவமொக்காவில் கள்ளக்காதல் ஜோடி கொலை வழக்கு தொடர்பாக கைதான கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2023-08-10 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்காவில் கள்ளக்காதல் ஜோடி கொலை வழக்கு தொடர்பாக கைதான கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கள்ளக்காதல் விவகாரம்

சிவமொக்கா மாவட்டம் துங்காநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது மனைவி ரேவதி (21). இந்தநிலையில் கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரேவதி அடிக்கடி கணவரிடம் கோபப்பட்டு கொண்டு, ஸ்ரீராமபுராவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவந்தது. கார்த்திக் 2 பேரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

மனைவி கொலை

இருப்பினும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த கார்த்திக், ரேவதி மற்றும் விஜயை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது நண்பரான பரத் (23), சதீஷ் (26), சந்தீப் (21) ஆகியோரின் உதவியை நாடினார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரேவதி மற்றும் விஜயை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த துங்காநகர் போலீசார் கார்த்திக், பரத், சந்தீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சதீஷ் மட்டும் தலைமறைவாகினார். இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை சிவமொக்கா மாவட்ட 3-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.

கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள்

நேற்று இந்த வழக்கு விசாரணை முடிந்தது. இதையடுத்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாற்றப்பட்ட கார்த்திக், பரத், சந்தீப், சதீஷ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். இதையடுத்து கார்த்திக், பரத், சந்தீப் ஆகிய 3 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். சதீஷ் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவரை கைது ெசய்து சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்