2 கிலோ போலி தங்கத்தை விற்று தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி; வாலிபர் கைது
௨ கிலோ போலி தங்கத்தை விற்று தொழில் அதிபரிடம் ரூ.௧௦ லட்சத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துமகூரு:
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்ராவ்(வயது 35). தொழில் அதிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கக்கிபிக்கி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (22) என்ற வாலிபர் சீனிவாஸ்ராவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னிடம் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க பந்து உள்ளது. அதை நான் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்ய இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய சீனிவாஸ்ராவ், கொரட்டகெரேவிற்கு வந்து முனிராஜை சந்தித்தார். அப்போது முனிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து ஒரு தங்க பந்தை, சீனிவாஸ்ராவிடம் கொடுத்தனர். அதை சீனிவாஸ்ராவ் சோதனை செய்து, அது உண்மையான தங்க பந்து என்பதை உறுதி செய்தார். இதையடுத்து ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து 2 தங்க பந்துகளை சீனிவாஸ்ராவ் வாங்கி சென்றார்.
இந்த நிலையில் வீட்டிற்கு ெசன்று அந்த தங்க பந்துகளை சோதித்து பார்த்தபோது அவை போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ்ராவ், முனிராஜை தொடர்பு கொண்டபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாஸ்ராவ் இதுபற்றி கொரட்டகெரே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முனிராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.