சிந்திகெரே வனப்பகுதியில் காட்டுத்தீ

சிக்கமகளூரு அருகே சிந்திகெரே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

Update: 2023-03-09 06:45 GMT

சிக்கமகளூரு-


சிந்திகெரே வனப்பகுதி

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகாவில் சிந்திகெரே வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் சிந்திகெரே வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ, காய்ந்திருந்த புற்கள் மூலம் மரம், செடி-கொடிகளுக்கு மளமளவென பரவியது. இதுகுறித்து அக்கம் பக்கத்்தினர் வனத்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் தீயை முழுமையாக அணைக்க முடிய வில்லை. இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

3 மோட்டார் சைக்கிள்கள் கருகின

தீ விபத்தில் வனத்துறை ஊழியர்களின் 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பறவைகள், சிறிய விலங்குகளும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சிகரெட் பிடித்து யாரேனும் தீைய அணைக்காமல் வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என்றும், காய்ந்த இலைகளில் அந்த சிகரெட் தீ பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் தேவணகூல் வனப்பகுதி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ அருகே உள்ள செடி, கொடிகள் மீது மளமளவென பரவியது. காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ரோந்து செல்ல வேண்டும்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், வனத்துறை ஊழியர்கள் வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் 3 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் 5 ஏக்கரில் இருந்த செடி, கொடிகள் நாசமாகின.

கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனத்துறையினர் அடிக்கடி வனப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்