பெங்களூருவில் தடய அறிவியல் மைய பெண் அதிகாரி தற்கொலை
பெங்களூருவில் தடய அறிவியல் மைய பெண் அதிகாரி தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடய அறிவியல் மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஸ்ருதி (வயது 40). இவர் தனது கணவருடன் மடிவாளவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ருதியும், அவரது கணவரும் பிரிந்து விட்டனர். மேலும் விவாகரத்து கேட்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதிக்கு விவாகரத்து கிடைத்து இருந்தது. இதன்பின்னர் ஸ்ருதி மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார். மேலும் அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஸ்ருதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு நான் தான் காரணம் என்று எழுதி வைத்து இருந்தார். இந்த சம்பவம் குறித்து மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.