பயங்கரவாதி மரணம்; 'நீதிக்கு புறம்பான கொலை' இந்தியாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
லாகூர்,
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து கடந்த 21-ம் தேதி பயங்கரவாதி ஊடுருவ முயன்றான்.
அந்த பயங்கரவாதியை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். அதில், பயங்கரவாதி படுகாயமடைந்தான்.
படுகாயமடைந்த பயங்கரவாதியை மீட்ட பாதுகாப்பு படையினர் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெயர் தபாரக் உசேன் என்பதும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பயங்கரவாதி தபாரக் உசேனை மீட்ட இந்திய படையினர் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பயங்கரவாதி தபாரக் உசேன் கடந்த 3-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தான்.
இதனை தொடர்ந்து மாரடைப்பால் உயிரிழந்த பயங்கரவாதி தபாரக் உசேனின் உடலை நேற்று இந்திய படையினர் பாகிஸ்தான் படையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதி மரணமடைந்தது தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபாரக் உசேன் நீதிக்கு புறம்பான கொல்லப்பட்டது குறித்து இந்திய தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. உசேன் மாரடைப்பால் மரணமடைந்தார், அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் அனுப்பட்டார் என இந்தியா கூறுவை பாகிஸ்தான் நிராகரிக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.