உப்பள்ளி விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக ரூ.273 கோடி ஒதுக்கீடு; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி

உப்பள்ளி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.273 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-11 18:45 GMT

உப்பள்ளி-

உப்பள்ளி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.273 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி விமான நிலையம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் செயல்பட்டு வரும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும்படி பலா் கோரிக்கை வைத்து வந்தனர். ஏனென்றால் அங்கு தற்போது தொழில் நுட்ப நிறுவனங்கள் பெருகி வருகிறது. மேலும் உள்நாட்டு ஏற்றுமதிகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் அது பொருளாதாரத்திற்கும், வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த விமான நிலையம் 3,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரே நேரத்தில் 600 பயணிகளை கையாளும் திறன் கொண்டது. இதை விரிவாக்கம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இது குறித்து கர்நாடக மத்திய மந்திரிகள் தரப்பில், மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ரூ.273 கோடி ஒதுக்கீடு

இதை ஏற்ற அவர் உடனடியாக விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு ரூ.273 கோடி ஒதுக்கீடு செய்தார்.

இது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

உப்பள்ளி-தார்வார் வணிக நகரமாக மாறி வருகிறது. தொழில் நுட்ப நிறுவனங்கள் பெருகி வருகிறது. வேலையின் காரணமாக பலர் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். மாநிலத்திலேயே 2-வது பெரிய நகரமாக இந்த மாவட்டம் பார்க்கப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்ற விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதி ராதித்ய சிந்தியா விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக ரூ.273 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

2024-ம் ஆண்டு பணிகள் தொடக்கம்

இதன் மூலம் விமான நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு முனையம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அவரச காலங்களில் ஒரே நேரத்தில் 1,400 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட இருக்கிறது. பழைய ஓடுபாதையை நீக்கிவிட்டு, புதிதாக 2600 மீட்டர் தூரம் புதிய ஓடுபாதை அமைக்கப்பட இருக்கிறது.

3 ஏரோ பிரிட்ஜ்கள், ஏப்ரான் நீட்டிப்பு மற்றும் சரக்கு கையாளுதல் மையங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த விரிவாக்கப்பணிகள் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்க இருக்கிறது. 2 ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும். 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விமான நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்